பண்டிகை காலத்தில் தனியார் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை கட்டுப்படுத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம்நாத், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ''விமானக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகளுக்கு நிர்வாகப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இரண்டு வாரங்களுக்குள் விதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அவை அரசிதழில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார்.இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
மேலும், இந்த வழக்கு மீண்டும் நவ. 16-ம் தேதி விசாரணைக்கு வரும். அப்போது புதிய விதிகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.